புதிய கண்டுபிடிப்புகளில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பு: ஐ.ஐ.டி., இயக்குநர் பேச்சு
புதிய கண்டுபிடிப்புகளில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பு: ஐ.ஐ.டி., இயக்குநர் பேச்சு
UPDATED : ஏப் 27, 2025 12:00 AM
ADDED : ஏப் 27, 2025 09:55 AM

 சென்னை: 
புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது என சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறினார்.
உலக அறிவுசார் சொத்து தினத்தை முன்னிட்டு, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிய தொழில் முனைவோருக்கு, ஸ்டார்ட்அப் டெக் பயோனீர் என்ற விருது வழங்கப்பட்டது. 
ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில் ஊக்குவிப்பு மையம் சார்பில், 12 ஆண்டுகளில், 50,000 கோடி ரூபாய் மதிப்பில் தொழில்நுட்பம் சார்ந்த, 457 நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில், 104 நிறுவனங்களை ஊக்குவித்துள்ளோம். இதில், 60 சதவீதம் பேர், ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள். மீதமுள்ள 40 சதவீதம் பேர், வெளியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்.
புதிய தொழில் முனைவோரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதி உதவி வழங்க தயாராக உள்ளன. தொழிலை ஊக்குவிப்பது, சந்தைப்படுத்துவது, தொழில்நுட்பத்தை புகுத்துவது, நிதி உதவி பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்க, ஒரு குழு அமைத்துள்ளோம்.
இன்றைய இளைஞர்கள், புதிய தொழில்நுட்ப யுக்தியுடன் சிந்திக்கின்றனர். மோட்டார் வாகனங்கள், பேட்டரி, சுகாதாரம், மருத்துவம், ஊட்டச்சத்து, வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.
விளையாட்டுத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதால், விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இளைஞர்களிடம் படிக்கும் போதும், தொழில் முனைவராக முயற்சிக்கும் போதும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இவர் அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஐ.சி.எஸ்.ஆர்., டீன் மனு சந்தானம், தாக்கம் மற்றும் தொழில் முனைவு மைய தலைவர் பிரபு ராஜகோபால், ஐ.ஐ.டி.எம்., தொழில் முனைவு மைய பொறுப்பாளர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஐ.ஐ.டி.எம்., தொழில் முனைவு மைய தலைமை செயல் அலுவலர் தமஸ்வதிகோஷ் பங்கேற்றனர்.

