போதை பொருள் பண மோசடி வழக்கு: 110 வங்கி கணக்குகள் முடக்கம்
போதை பொருள் பண மோசடி வழக்கு: 110 வங்கி கணக்குகள் முடக்கம்
ADDED : நவ 16, 2025 10:59 PM

புதுடில்லி: டில்லியில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட, 110 வங்கிக் கணக்குகளை முடக்கிய அமலாக்கத் துறை, 70 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறி முதல் செய்துள்ளது.
ரூ.900 கோடி தலைநகர் டில்லியில், 82.53 கிலோ உயர் தர 'கோகைன்' போதைப் பொருளை, கடந்தாண்டு நவம்பரில் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், ஐந்து பேரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 900 கோடி ரூபாய்.
இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, தனியாக வழக்குப் பதிந்த அமலாக்கத் துறை, கடந்த 14ல், டில்லி, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் உட்பட ஐந்து இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளின் போது, மொபைல் போன் செயலிகள் மூலம், 'ஆன்லைன் பெட்டிங் நெட்வொர்க்' செயல்படுவது தெரிய வந்தது.
இதில் கிடைத்த பணம், சட்ட விரோதமாக பயன் படுத்தப்பட்டு உள்ளது.
பறிமுதல் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட, 110 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன; 70 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை விரைவாக கையாள பயன் படுத்தப்பட்ட, 73 யு.பி.ஐ., கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
நிதி பரிமாற்றத்திற்காக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயை தளமாகக் கொண்ட, 'கிரிப்டோகரன்சி' பயன் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

