'தாயுமானவர்' திட்ட பயனாளிகளில் திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை!
'தாயுமானவர்' திட்ட பயனாளிகளில் திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை!
ADDED : செப் 25, 2025 07:00 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்ட பயனாளிகளில் 119 பேர் உயிருடன் இல்லாதது, வீடு தேடி ரேஷன் பொருள் கொண்டு சென்றபோது தெரிய வந்தது.
தமிழகத்தில், தனிநபர் ரேஷன் கார்டு பெற்ற மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகிக்கும் தாயுமானவர் திட்டம் நடை முறையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில் 71,371 பேர், பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப் படுகின்றன.
ஆக., மாதத்தில் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில், 49,036 பேர் வீடுகளிலும், நேரடியாக கடைகளுக்கு சென்றும் பொருட்கள் வாங்கி உள்ளனர். வீடு பூட்டப்பட்டது, வெளியூர் சென்றது, இடம் மாறியது, உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால், பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில், 22,335 பேர், ஆக., மாதம் பொருள் பெறவில்லை. மாவட்ட வழங்கல் பிரிவினர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 71,371 பேர், தாயுமானவர் திட்டத்தில் வீட்டிலேயே ரேஷன் பொருள் பெறும் பயனாளிகளாக உள்ளனர்.
'இவர்களில், கடந்த ஆக., மாதம், 49,036 பேர் ரேஷன் பொருள் பெற்றுள்ளனர்; 22,335 பேர் பொருட்கள் பெறவில்லை. 'தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் பெறாதோரில், 119 பேர் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் கார்டுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.