கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
ADDED : டிச 28, 2025 10:27 PM

கீழடி : சிவகங்கை மாவட்டம் கீழடியில், 11ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கீழடியில் 2014 முதல் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள், அதன் காலம், அதனை பற்றிய குறிப்புகளை மத்திய தொல்லியல் துறையின் காபா அமைப்பிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வு செய்தபின் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த காபா அமைப்பு அனுமதி வழங்கும். 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தாமதமாக துவங்கியதால், 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டன.திறந்தவெளி அருங்காட்சியக பணிகளும் நடந்ததால், 2025ல் அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை. 10ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் காபாவிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பித்துவிட்டது.
இதையடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின், 11ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன.

