ஜெய்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 17 வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி, 12 பேர் பலி
ஜெய்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 17 வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி, 12 பேர் பலி
ADDED : நவ 03, 2025 04:23 PM

ஜெய்பூர்: ஜெய்பூர் அருகே சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஹர்மதா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட லோஹா மண்டி என்ற பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பிற்பகல் 1 மணியளவில் சாலை எண் 14ல் இருந்து சரக்கு லாரி ஒன்று நெடுஞ்சாலையில் நுழைய முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. விபத்தால் அங்கு போக்குவரத்தில் திடீர் சீர்குலைவு ஏற்பட, மொத்தம் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
விபத்தில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஜெய்பூர் கலெக்டர் ஜிதேந்திர சோனி கூறுகையில், லோஹா மண்டி அருகே சரக்கு லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என்றார்.
கோர விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

