ADDED : செப் 10, 2025 11:44 AM

புதுடில்லி: நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து டில்லி போலீசார் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, தெற்கு டில்லியில் நடத்தப்பட்ட சோதனையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அப்தாப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பயங்கரவாத தடுப்பு சோதனைகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஒரு விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தானிஷ் என்ற நபரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பல மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ' ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு படையினருடன் இணைந்து டில்லி காவல் சிறப்புப் பிரிவினர், இஸ்லாம்நகரில் அமைந்துள்ள தபாரக் லாட்ஜில் சோதனை நடத்தினோம். அந்த நபரை கைது செய்துள்ளோம். பல மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.
இதேபோல, பிற மாநிலங்களிலும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்காக போலீசார் டில்லி அழைத்து வருகின்றனர்.