ADDED : அக் 01, 2025 07:52 AM

காத்மாண்டு: நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சிறுமியரை அம்மனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. நேபாளத்தின் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, பல கட்ட சோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கின்றனர்.
சிறுமியின் உடல், மன வலிமையை சோதித்து அவர் கன்னி தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிந்துக்கள், புத்த மதத்தினரால் வழிபடப்படுகிறார். பருவம் எய்தும் வரை அச்சிறுமியை கன்னி தெய்வமாக கருதி பூஜிக்கின்றனர்.
அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயதானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார். அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியர், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். பண்டிகைகளுக்காக ஆண்டில் சில முறை மட்டுமே வெளியே அனுப்பப்படுவர்.
பருவம் எய்திய பின் அவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதிலும், இயல்பான வாழ்க்கையை வாழ்வதிலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குமாரிகள் இப்போது அரண்மனைக்குள் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு அரசு ஒரு சிறிய மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.