2000 ஆண்டு பழமையான நாணயங்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
2000 ஆண்டு பழமையான நாணயங்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
ADDED : ஜன 12, 2026 01:30 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான பேரரசு காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகில் உள்ள தட்சசீலம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷான பேரரசு காலத்து நாணயங்களை அந்நாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நாணயங்கள் குஷான பேரரசின் கடைசி பேரரசர்களில் ஒருவரான மன்னர் வாசுதேவாவின் காலமான 2ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது. மேலும், தட்சசீலம் அருகில் உள்ள பீர்மவுன்ட் என்ற இடத்தில் விலைமதிப்பற்ற லேபிஸ் லாசுலி என்ற நீலக்கல் துண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இது நாணயங்களைவிட மிகவும் தொன்மையானது.
கண்டெடுக்கப்பட்ட வெண்கல நாணயங்களில் ஒருபுறம் மன்னர் வாசுதேவாவின் உருவமும், மறுபுறம் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இது குஷான மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பின்பற்றாமல், பல மத கடவுள்களையும் மதித்து போற்றினார்கள் என்பதை காட்டுகிறது-. மேலும், இந்திய, ஈரானிய, கிரேக்க மற்றும் புத்த மத கடவுள்களையும் தங்கள் நாணயங்களில் குஷான மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக தட்சசீலம் ஒருகாலத்தில் உலகளாவிய வணிக மையமாக இருந்தது உறுதியாகியுள்ளது.
தட்சசீலம், அப்போதைய மவுரிய பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் எனும், இன்றைய பீஹார் தலைநகர் பாட்னாவுடன் கலாசார மற்றும் வணிக பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
மேலும், கனிஷ்கர் போன்ற மன்னர்களின் கீழ் தட்சசீலம் நிர்வாக மையமாக மாறியதுடன், கிரேக்கம், பாரசீகம் மற்றும் இந்திய கலைகள் இணைந்த காந்தார கலை வளரவும் முக்கிய இடமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

