விநாயகர் ஊர்வலம் மீது கல்வீச்சு; மாண்டியாவில் 21 பேர் கைது; தடியடி
விநாயகர் ஊர்வலம் மீது கல்வீச்சு; மாண்டியாவில் 21 பேர் கைது; தடியடி
ADDED : செப் 09, 2025 01:56 AM

மாண்டியா : மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது, மசூதியில் இருந்து கல் வீசி தாக்குதல் நடத்திய, 21 பேர் கைது செய்யப்பட்டனர். மசூதி முன் போராட்டம் நடத்திய, ஹிந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்துார் டவுன் சன்னேகவுடா லே - அவுட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை, ஏரியில் கரைக்க நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ராம் ரஹீம் சாலையில் ஊர்வலம் சென்ற போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்து சிலர், ஊர்வலம் மீது கல்வீசினர்.
இதில் போலீசார், ஹிந்து அமைப்பினர் என, 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
கல்வீச்சு சம்பவம் குறித்து ஹிந்து அமைப்பினர் அளித்த புகாரில், முகமது அவேஸ், முகமது இர்பான், நவாஸ்கான் உட்பட 21 இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவே கைது செய்யப்பட்டனர்.
கைதான, 21 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கல்வீச்சு நடந்த மசூதி முன் நேற்று காலை, பல்வேறு ஹிந்து அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
அங்கிருந்து கலைந்து சென்ற ஹிந்து அமைப்பினர், மத்துார் தாலுகா அலுவலகம் முன் கூடி போராட்டம் நடத்தினர். இதில், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, மத்துார் நகரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்து உள்ளனர். மத்துார் நகரில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.