மியான்மர் சைபர் மோசடி கும்பலில் சிக்கிய இந்தியர்கள் 270 பேர்; இன்று நாடு திரும்பினர்
மியான்மர் சைபர் மோசடி கும்பலில் சிக்கிய இந்தியர்கள் 270 பேர்; இன்று நாடு திரும்பினர்
ADDED : நவ 06, 2025 07:54 PM

புது டில்லி: மியான்மர் சைபர் மோசடி மையத்தில் சிக்கி வலுக்கட்டாயமாக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 270 பேர் இன்று நாடு திரும்பினர்.
மியான்மரில் உலக மோசடிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் அப்பாவிகளை வரவழைத்து அவர்களை மிரட்டி சைபர் வேலையில் ஈடுபடுத்தும் துணிகர செயலை சர்வதேச மாபியா கும்பல் செய்து வருகிறது.
இத்தகைய செயல் இங்குள்ள கே.கே. பார்க்கின் சைபர் கிரைம் மையத்தில் நடப்பதாக கண்டறிந்த அந்நாட்டு அரசு கடந்த மாத இறுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 28 நாடுகளைச் சேர்ந்த 1,500 சிக்கினர். இதில் இந்தியர்கள் 500 பேரும் அடங்குவர். அவர்களை நாடு திருப்பி அனுப்பும் முயற்சியில் நமது துாதரகம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து பாங்காக்கில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப்படை இயக்கும் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 26 பெண்கள் உட்பட 270 இந்தியர்களை, மே சோட்டில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து அரசு ஏற்பாடு செய்தது.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மீதமுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இந்தியா நாளை கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது.
இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

