அமெரிக்காவில் இருந்து 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விரைவில் இந்தியா வருகிறது: பாக்., எல்லையில் நிறுத்த முடிவு
அமெரிக்காவில் இருந்து 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விரைவில் இந்தியா வருகிறது: பாக்., எல்லையில் நிறுத்த முடிவு
UPDATED : டிச 15, 2025 11:15 PM
ADDED : டிச 15, 2025 09:46 PM

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கவும், உளவு நடவடிக்கைகளுக்காகவும், ஒப்பந்தம் செய்யப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் எஞ்சிய 3 ஹெலிகாப்டர்களும், அமெரிக்காவில் இருந்து விரைவில் இந்தியா வர உள்ளது. இவை பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
நம் பாதுகாப்பு படைகளுக்கு, 13,952 கோடி ரூபாய் செலவில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது. இதன்படி, நம் விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.இதை தொடர்ந்து, கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, 2020ம் ஆண்டு ஒப்பந்தம் போடப் பட்டது.கடந்த ஆண்டே நம் ராணுவத்திடம் இந்த ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 மாத காலதாமதத்திற்கு பின், 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை முதல் தவணையாக அமெரிக்கா ஜூலை மாதம் ஒப்படைத்தது.
'பாலைவன' கருப்பொருளில் வண்ணம் தீட்டப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவிலிருந்து போக்குவரத்து விமானத்தில் வந்தடைந்தன. இது உலகின் சிறந்த போர் ஹெலிகாப்டர்களில் ஒன்று. இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானின் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிறுத்தப்பட உள்ளன. மேலும் லே-, லடாக் பகுதியிலும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் எஞ்சிய 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும் இந்திய ராணுவம் பெற உள்ளது. இந்த 3 ஹெலிகாப்டர்களும் ஜோத்பூரில் நிறுத்தப்பட உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அங்கு நிறுத்தப்படுகிறது.
அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வருகையால், நம் ராணுவத்தின் திறன் மேலும் வலிமை பெறும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் சிறப்பம்சங்கள்
1.அப்பாச்சி ஹெலிகாப்டரில் 2 பேர் பயணிக்க முடியும். மொத்தம் 10,432 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
2.இந்த ஹெலிகாப்டர் ட்ரோன்களை கட்டுப்படுத்த திறன் கொண்டது. இதில் T700-GE-701D இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
3. முழுமையான ஒருங்கிணைந்த மற்றும் தாக்குதலுக்கு உகந்த ஹெலிகாப்டர் என அதனை தயாரிக்கும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4.இந்த ஹெலிகாப்டர்களை, தாக்குதலுக்கு மட்டுமின்றி, உளவு, பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
5.இரவு நேரத்திலும் செயல்படும் நேவிகேசன் அமைப்பு உள்ளது. இது ராணுவ தாக்குதல் திறன்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
6.இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டு உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், அனைத்து வானிலை மற்றும் பருவநிலைகளிலும், இலக்கை பற்றிய துல்லியமான தகவல்களை தருகின்றன.
7.அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிநவீன கட்டமைப்பு கொண்டதுடன், போர்க்களத்தில் பல முனை நடவடிக்கைகளுக்கு பயன்படும். ராணுவத்தின் நிலம், கடல், வான்வெளி, விண்வெளி மற்றும் சைபர் தலங்களில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
8.அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நெட்வொர்க்-மையப்படுத்ததிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுத அமைப்பைக் கொண்டுள்ளன. விமானத்தின் சென்சார்கள், மென்பொருள் மற்றும் ஆயுத செயல்திறன் ஆகியவற்றில் பல மேம்பாடுகள் இதில் அடங்கும்.
9.ஆன்போர்டு மற்றும் ஆப் போர்டு சென்சார்கள், ஆயுதங்கள் மற்றும் அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதற்கு தேவையான கருவிகளை பயன்படுத்துவதற்கு தேவையான அமைப்புகள் மூலம் மேம்பட்ட திறன்களை வழங்கவும், ஒருங்கிணைக்கும் வசதி இதில் உள்ளது.

