ஆப்கன் - பாகிஸ்தான் இடையே மீண்டும் வெடித்தது மோதல்
ஆப்கன் - பாகிஸ்தான் இடையே மீண்டும் வெடித்தது மோதல்
ADDED : நவ 25, 2025 06:23 PM

காபூல்: பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இரு நாட்டு எல்லையில் இருந்து இயங்கி வரும் டிடிபி எனப்படும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத குழுவே காரணம். இக்குழு ஆப்கனில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதை கட்டுப்பாடுத்துமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டும் ஆப்கானிஸ்தானால் இயலவில்லை. பாகிஸ்தான் எல்லை தாண்டி சென்று ஆப்கனில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. தீர்வு காண, கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.
இந்நிலையில் பக்டிகா, கோஸ்ட், குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்ப 10 பேர் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசில் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் என்பது ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீதான நேரடி தாக்குதல். சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறியுள்ளது தெளிவாக காட்டுகிறது. இதனால், பாகிஸ்தான் எதையும் சாதிக்கவில்லை. இதற்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இதற்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

