நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் மேலும் 36 பேர் ஆதரவு; பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என காட்டம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் மேலும் 36 பேர் ஆதரவு; பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என காட்டம்
ADDED : டிச 20, 2025 10:44 PM

புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் 36 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருக பெருமான் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். ஆனால் அதை நிறைவேற்றாத தமிழக அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது. அதேநேரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.தற்போது மேலும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் 36 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, டில்லி மற்றும் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் மேனன் மற்றும் எஸ் வைத்தியநாதன் ஆகியோர் உட்பட நீதிபதிகள் 36 பேர் கையெழுத்திட்டு கூட்ட அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி. நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கட்டாயப்படுத்தும் ஒரு வழிமுறையாக பதவி நீக்க அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.
அத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு வெறுப்பூட்டுவதாகும். தற்போதைய முயற்சி வெட்கக்கேடான ஒன்றாகும். பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது நீதித்துறை கடமையைச் செய்ததற்காக அவரை பதவி நீக்கம் செய்வதா?
அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகளை வசைபாடுவதற்கான ஒரு வெட்கக்கேடான முயற்சி இது. இது தொடர அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

