ஆபரேஷன் சிந்துாரில் 24 மணி நேரமும் உழைத்த 400 விஞ்ஞானிகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
ஆபரேஷன் சிந்துாரில் 24 மணி நேரமும் உழைத்த 400 விஞ்ஞானிகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
ADDED : செப் 09, 2025 05:50 PM

புதுடில்லி: ஆபரேஷன் சிந்துாரின்போது இரவு பகலாக 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உழைத்தனர் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று தெரிவித்தார்.
புதுடில்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின்(ஏஐஎம்ஏ) 52 வது தேசிய மேலாண்மை மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் நாராயணன் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, 400க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 24 மணிநேரமும் உழைத்தனர். இந்த நடவடிக்கையின் போது பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் நாங்கள் பயன்படுத்தினோம். இந்த செயல்பாட்டில் அனைத்து செயற்கைக்கோள்களும் சிறப்பாக செயல்பட்டன.
விண்வெளி மீது மிகவும் கூர்மையான கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் தீர் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்கள் இந்த மோதலில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
2027ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டத்துக்கு, இஸ்ரோ 7,700 சோதனைகளை இதுவரை மேற்கொண்டுள்ளது. பயணம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இன்னும் 2,300 சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ மூன்று பணியாளர்கள் இல்லாத பயணங்களை நடத்த திட்டமிட்டுள்ளது, முதல் பயணம் டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளன.
2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040ம் ஆண்டுக்குள் ஒரு இந்திய விண்வெளி வீரரை சந்திரனில் தரையிறக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளார்.இவ்வாறு நாராயணன் பேசினார்.