கி.பி., 5ம் நுாற்றாண்டு பாய்மர கப்பல்; குஜராத் - ஓமனுக்கு வரலாற்று பயணம்
கி.பி., 5ம் நுாற்றாண்டு பாய்மர கப்பல்; குஜராத் - ஓமனுக்கு வரலாற்று பயணம்
UPDATED : டிச 30, 2025 02:40 AM
ADDED : டிச 30, 2025 01:59 AM

புதுடில்லி: இந்தியாவில் இருந்து ஓமனுக்கு பயணிக்க இருக்கும் இன்ஜின் இல்லாத 'ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா' கப்பல் குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பண்டைய காலங்களில் கப்பல் கட்டும் முறை வியக்கத்தக்க வகையில் இருந்தது. குறிப்பாக இந்தியா, அரேபியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 'தையல் முறை' கப்பல்கள் அப்போது பிரபலமாக இருந்தன. இவை பாய்மரக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன.

கி.பி., 5ம் நுாற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பாய்மரக் கப்பலின் வரலாற்று சிறப்பை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், அதே பண்டைய தொழில்நுட்பத்துடன் ஒரு பாய்மரக் கப்பலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்பம்:
ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் நவீன காலத்து கப்பலில் இருக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இன்ஜின் இல்லாமல் முழுக்க முழுக்க பாய்மர தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சிறப்பு என்னவெனில் மரப்பலகைகளை ஆணிகள் மூலம் இணைக்காமல், தேங்காய் நார் மற்றும் இயற்கை இழைகளால் இணைத்துள்ளனர்.
அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் பாய்மரக் கப்பலை போலவே, இந்த கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டைய கால நுால்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எழுதி வைத்த குறிப்புகளையும் பின்பற்றி இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளனர். அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை அப்படியே இந்த காலத்திற்கு நகல் எடுத்துள்ளனர்.
நாகரிகம்:
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா பாய்மரக் கப்பல் நம் நாட்டின் பண்டைய வர்த்தக நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மேற்காசிய நாடான ஓமன் கடற்கரை வரை தன் பயணத்தை துவக்கியுள்ளது.
இந்தியாவுக்கான ஓமன் துாதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில், நம் மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரடல் கிருஷ்ணா சுவாமிநாதன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார்.
பண்டைய கால நாகரிகத்துடன் பயணிக்கும் பாய்மரக் கப்பல் குழுவினருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

