'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்... கலப்பட நெய் !: திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை: 4 பேர் அதிரடி கைது
'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்... கலப்பட நெய் !: திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை: 4 பேர் அதிரடி கைது
ADDED : நவ 15, 2025 11:37 PM

பெங்களூரு: தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான, 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கே.எம்.எப்., வினியோகஸ்தர் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனப்படும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், 'நந்தினி' பெயரில் போலியான மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கே.எம்.எப்., ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை துவங்கியது.
அப்போது, பெங்களூரு சாம்ராஜ்பேட், நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள ஒரு குடோனில், போலியான கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்படையினருக்கு தகவல் கிடைத்தது. கே.எம்.எப்., ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
குடோனில் அட்டை பெட்டிகளில், 'நந்தினி' பெயரில் இருந்த, 8,136 லிட்டர் கலப்பட நெய், நான்கு வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குடோன் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த மகேந்திரா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
கே.எம்.எப்., வினியோகஸ்தரான மகேந்திரா, கே.எம்.எப்.,பில் இருந்து அசல் நெய் வாங்கி, திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு போலியான நெய் தயாரிக்க ஆலையை நடத்தி வந்துள்ளனர். அங்கு அசல் நெய்யுடன் டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் கலந்து உள்ளனர்.
ஐந்து லிட்டர் நெய் பாக்கெட் என்றால், அதில் ஒரு லிட்டர் நெய் தான் உண்மையானது. மற்ற நான்கு லிட்டரும் கலப்படமானது.
கே.எம்.எப்., வினியோகஸ்தர் என்பதால், நெய் பாக்கெட், அதை கடைகளுக்கு அனுப்பும் அட்டை பெட்டிகள் மீது என்னென்ன எழுதப்பட்டு இருக்கும் என்பது மகேந்திராவுக்கு நன்கு தெரிந்துள்ளது. நந்தினி பெயரில் நெய் பாக்கெட்டுகள், அட்டைகளை தயாரித்துள்ளார்.
திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து, அங்கிருந்து வேன்களில் பெங்களூரு கொண்டு வந்துள்ளனர். இங்குள்ள கடைகளில் விற்று அதிக லாபம் ஈட்டி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கலப்பட நெய் தயாரித்துள்ளனர்.
கலப்பட நெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ஒரு கோடியே, 26 லட்சத்து, 95,200 ரூபாய்.
கலப்பட நெய் தயாரித்ததாக மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்ற முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

