டில்லியில் தாக்குதல் நடத்த பரிதாபாத்தில் உண்டான சதி
டில்லியில் தாக்குதல் நடத்த பரிதாபாத்தில் உண்டான சதி
ADDED : நவ 11, 2025 10:18 PM

புதுடில்லி: ஹரியானாவின் பரிதாபாத் நகரில் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு பயங்கரவாதிகளின் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதால், தேசியத் தலைநகர் டில்லியில் திட்டமிடப்பட்ட பெரியளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக தலைநகர் டில்லி , மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர்கடந்த அக்., 19ம் தேதி, ஸ்ரீநகர், நவ்கம் உள்ளிட்ட இடங்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இது அங்கு வழக்கமானது என்றாலும், இந்த முறை அதில் வழக்கத்துக்கு மாறான சில நிகழ்வுகள் அடங்கியிருந்தது. அப்பகுதி போலீஸ் எஸ்எஸ்பி சந்தீப் சக்கரவர்த்தியின் கவனத்துக்கு செல்லவே அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அவர் தலைமையில் நடந்த விசாரணையில் கிடைத்த சிறிய தகவல்கள் தான், அடுத்தடுத்த திருப்பங்களுக்கு முக்கியமானதாகவும், பயங்கரவாதிகளின் சதி நிறைவேறுவதற்கு முன்னரும் நிறுத்தப்பட்டது.
போஸ்டரை ஒட்டியவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்ததில் , ஆரிப் நிசார் தர், யாசிர் அல் அஸ்ரப் மற்றும் மசூத் அஹமதுதர் ஆகியோர் சிக்கினர். இந்த விவகாரத்தில் இவர்கள் தான் முதலில் சிக்கினர்.
மதகுரு
விசாரணையில் அவர்கள் மால்வி இர்பான் அஹமது என்ற மதகுருவை காட்டினார். சோபியானில் அவரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் வாய் திறக்க மறுக்கவே, அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். அங்கு போலீசாருக்கு மொபைல்போன் ஒன்று கிடைத்தது. அதில், மால்வி இர்பான் அஹமது பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் உமர் பின் கத்தாப் என்பவனுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்தது உள்ளூர் சதி அல்ல, அது நாடு கடத்த திட்டம் என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து மதகுருவுக்கு நெருக்கமான கந்தர்பால் பகுதியைச் சேர்ந்த ஜமீர் அஹமது என்பவனை பிடித்து விசாரித்தனர். அவன் அளித்த வாக்குமூலம் தான் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது. பயங்கரவாத கட்டமைப்பு என்பது மதகுருக்கள் மற்றும் தெருவில் போராடுபவர்களை தாண்டி, மருத்துவ வல்லுநர்களையும் இர்பான் அஹமது மூளைச்சலவை செய்தது தெரிந்தது. டாக்டர் வீட்டில் ஆயுதங்களை பார்த்ததாகவும் அவன் கூறியுள்ளான். இதன் மூலம் டாக்டர்கள் தங்களுக்கு உள்ள அந்தஸ்தை பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
ஹரியானாவில் தேடுதல்
அவர்களில் ஒருவன், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல் என்பவன் என தெரியவந்தது. தேடிய போது, அவன் காஷ்மீரில் இல்லாததும், பல மாதங்களுக்கு முன்பே மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவன் தொடர்புடைய இடங்களை ஆராய்ந்த போது, ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அப் பலா பல்கலையில் ஆசிரியராக இருப்பது தெரிந்தது.
இதனையடுத்து காஷ்மீர் போலீசார் ஹரியானா மற்றும் உ.பி., போலீசாருடன் ஆலோசனை நடத்தினர் அவர்களின் முக்கிய நோக்கம் பயங்கரவாதிகள் வெடிபொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை செயலிழக்க வைப்பது என்பதாகும்.
தொடர்ந்து,ஹரியானாவின் பரிதாபாத்தில் போலீசார் சோதனை நடத்தி டாக்டர் முஸாமில் மற்றும் ஹபீஸ் முகமது இஷ்தியாக் ஆகியோரை கைது செய்தனர்.உ.பி.,யின் ஷஹாரான்பூரில் காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அடீல் என்பவனை கைது செய்தனர்.
மேலும் பரிதாபாத் நகரில் பல வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதுடன், 2900 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.
அதில், அமோனியம் நைட்ரேட், ரசாயனம், மின்சார சாதனங்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வெடிபொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இவற்றுடன் ஏகே 56 , ஏகே கிரின்கோவ் ரைபிள், சீன பிஸ்டல், பெரட்டா பிஸ்டல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் வழக்கு இன்னும் முடியவில்லை. ஒரு முக்கியமான உறுப்பினர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். வெடிமருந்துகள் குறித்து உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிமருந்து சதியில் காஷ்மீரை சேர்ந்த மற்றொரு டாக்டரான உமர் என்பவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இவனும் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலையில் பணியாற்றி வருகிறான். தற்போது தலைமறைவாக இருக்கும் இவன், முசாமில் மற்றும் அடீல் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உமரின் பங்கு
நேற்று டில்லியின் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அருகில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் 40 நிமிடம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான கார், உமரின் கட்டுப்பாட்டில் இருந்தது இருக்கலாம் அல்லது அவன் ஓட்டி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தனது கூட்டாளிகள் கைதாகி சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது தெரியவந்ததும், டில்லியில் தற்கொலைப்படை தாக்குதலை அவன் நிகழ்த்தியிருக்கக்கூடும் என போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து போலீசார், தேசிய புலனாய்வு முகமை மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவ்காமில் துவங்கிய விசாரணை மூலம் பயங்கரவாத குழுவினர் சிக்கியதால் டில்லியில் பெரிய தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

