தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'சும்மா இருக்கிறார்கள்' எனச் சொல்பவர்களை வாயடைக்க வைத்த அதிரடித்தீர்ப்பு

'சும்மா இருக்கிறார்கள்' எனச் சொல்பவர்களை வாயடைக்க வைத்த அதிரடித்தீர்ப்பு

'சும்மா இருக்கிறார்கள்' எனச் சொல்பவர்களை வாயடைக்க வைத்த அதிரடித்தீர்ப்பு

19


ADDED : ஜூன் 13, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

19

ADDED : ஜூன் 13, 2026 06:41 AM


19
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மா இருக்கிறார்கள்' என்று சொல்பவர்களின் வாயடைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 'குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் வெறும் இல்லத்தரசிகள் அல்ல; அவர்கள் தேசத்தைக் கட்டமைப்பவர்கள். விபத்தில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுபவருக்குச் சமமாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும்' என நீதிமன்றம் பெண்களின் உழைப்பை அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசிகள் நம்முடன் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உச்சகட்ட நீதி


கீழ் நீதிமன்றங்களோடு இந்த வழக்கு முடிந்திருந்தால் வீட்டுத்தலைவியின் அருமை வெளியே தெரியாமல் போயிருக்கும். அடுத்தடுத்து மேல்முறையீடு செய்ததால்தான், உச்சநீதிமன்றம் பெண்களின் உழைப்புக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த மெச்சத்தகுந்த நீதியை வழங்கியுள்ளது. கணவனுக்கும், குழந்தைகளுக்கும் இதுவொரு நிம்மதியான தீர்ப்பு.

- தமிழரசி: அருள்புரம்

பொருளாதார மதிப்பு


வீட்டை நிர்வாகிக்கும் பெண்களால் பொருளாதார ரீதியாக எவ்வித வருமானமும் இல்லை என ஒற்றை வார்த்தையில் குறைத்து மதிப்பிடுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. வெறும் இல்லத்தரசி என்று சுருக்காமல், அவர்கள் குடும்பத்திற்குத் தரும் அரவணைப்பும் உழைப்பும் 'விலைமதிப்பற்ற பொருளாதார மதிப்பு' கொண்டது என்பதை நீதிமன்றம் இன்று சத்தமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

- நந்தினி, காலேஜ் ரோடு.

புதிய கவுரவம்


இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு மனித மூலதனமே முக்கியம். அதை உருவாக்குவதே பெண்கள்தான். ஆனால், பொருளாதார கணக்கெடுப்பில் பெண்களின் பங்கு 'பூஜ்ஜியம்' எனக் கருதப்பட்டது கவலையளித்தது. பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், இன்று பெண்களுக்குப் புதிய கவுரவம் கிடைத்துள்ளது.

- ராணி, வ.உ.சி. நகர்.Image 1587454

இயந்திர எரிபொருள்


கோர்ட் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை; பல ஆண்டுகளாக நாங்கள் எதற்காகப் புலம்பி, கேட்டு வந்தோமோ அதை இன்று நீதியாக மாற்றியிருக்கிறது. இல்லத்தரசிகளின் 24 மணி நேர உழைப்புதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார இயந்திரத்திற்கும் எரிபொருள்! இத்தீர்ப்பு விபத்து இழப்பீடு வழக்குகளுக்குப் பெரிய வழிகாட்டியாக அமையும்.

- ஷர்மிளா, ராக்கியாபாளையம்.

பெரும் ஆறுதல்


சில ஆண்கள் 'உங்க மனைவி என்ன செய்கிறார்?' என்று கேட்டால், 'வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்' என அசால்ட்டாகச் சொல்வார்கள். நாட்டின் சேமிப்பு வரை பெண்களின் பங்கு எவ்வளவு தெரியுமா? உழைப்புக்கு ஊதியமும் அங்கீகாரமும் தேடிய பெண்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய ஆறுதலாகவும், புதிய வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

- பானுமதி, கருவம்பாளையம்.

மறைந்தும் காப்பவள்


ஒரு குடும்பத் தலைவியின் இழப்புக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு இழப்பீடு வழங்குவது ஆறுதல் தரக்கூடியதொரு தீர்ப்பாகும். ஒரு தாய் உயிரிழக்கும் போது, பிள்ளைகள் தங்களின் கண்ணியமான எதிர்கால வாழ்க்கை, சமூகப் பாதுகாப்பு, கல்வி பெறும் உரிமை, அன்பான உபசரிப்பு மற்றும் தாயின் அரவணைப்பு எனச் சகலத்தையும் இழந்து தவிக்கிறார்கள். 'அண்ணன், தம்பி போனால் பலம் போனது' என்பார்கள்; ஆனால் 'மனைவியை இழந்தால் சகலமும் போய்விட்டது' என்பதே யதார்த்தம்.

இந்தத் தேசம் எப்போதும் இளமையோடு இருக்கவும், மனித வளம் காக்கப்படவும் பெண்கள் எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். இருந்தபோதிலும், இன்னும் பெண்கள் தங்களின் உரிமைகளைப் பெறப் போராட வேண்டிய நிலையே நீடிக்கிறது. தன் வாழ்நாளில் குடும்பத்தினரின் அனைத்துச் சுக துக்கங்களையும், வலி வேதனைகளையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தைப் பாதுகாத்த ஒரு பெண், தன் மறைவுக்குப் பின்பும் இந்தத் தீர்ப்பின் மூலம் குடும்பத்தைப் பாதுகாக்கிறாள் என்பதற்கு அடையாளம் தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

- நதியா, மாநிலத் துணைச் செயலாளர்

சமூக உடைப்பு


ஆண்கள் அல்லது அரசு வேலையில் இருக்கும் பெண்கள் விபத்தில் இறந்துவிட்டால், அவர்களது ஊதியத்தைக் கணக்கிட்டு உடனடியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், காலையிலிருந்து இரவு வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து, குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லாமல், அங்கீகாரமும் இல்லாமல் 'இல்லத்தரசி' என்ற ஒற்றை வரியில் அவர்களை முடக்குவதே நம் சமூகத்தின் வழக்கமாக உள்ளது. அப்படி காலங்காலமாக மாறாமல் இருக்கும் தப்பான சமூகக் கட்டமைப்பை உடைத்தெறிவதே இந்த வரலாற்றுத் தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வெறும் 'இல்லத்தரசிக்குக் கிடைத்த இழப்பீடு' என அலட்சியமாகக் கருதாமல், ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த உழைப்பிற்கும், உரிமைக்கும் கிடைத்த நீதியாகப் பார்க்க வேண்டும். தீர்ப்பு என்ற ஒற்றை வார்த்தையை விட, நாற்புறமும் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்து அனுதினமும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் வியர்வைக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உயரிய அங்கீகாரம் இது. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதால், வரும் காலங்களில் விபத்து இழப்பீடு சார்ந்த பல்வேறு வழக்குகளுக்கு இதுவொரு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும், நல்லதொரு தீர்வாகவும் அமையும் என உறுதியாக நம்பலாம்.

- பவித்ராதேவி, மாவட்டத் தலைவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us