சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
ADDED : அக் 16, 2025 12:33 PM

சென்னை: வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர் என பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சட்டசபையில் பேசும் போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாஜ தலைவராக பொறுப்பு ஏற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். அவரை பொறுத்தவரை கட்சி பாகுபாடுயின்றி அனைவர் இடத்திலும் அன்போடு, அமைதியோடு பேசக்கூடியவர். அவர் கோபமாக பேசி நான் இதுவரை பார்த்தது இல்லை.
எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தாலும், அவர் விமர்சனங்களை செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாக தான் பேசுவார். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர். ஆகவே அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதியாக விளங்கி கொண்டு இருக்க கூடியவர். 64 முடிந்து 65 வயது வயதில் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.
அவருக்கு என்னுடைய சார்பில், திமுக எம்எல்ஏக்கள் சார்பில், வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எங்களது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் முத்துசாமிக்கும் இன்று பிறந்த நாள். அவருக்கும் என்னுடை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபை சார்பில் இருவருக்கும் (நயினார் நாகேந்திரன், முத்துசாமி) பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.