ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு
ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு
UPDATED : அக் 04, 2025 01:21 PM
ADDED : அக் 04, 2025 11:54 AM

துபாய்: பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, துபாயில் தயார் செய்யப்படும் ஒரு கோப்பை பில்டர் காப்பி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது துபாய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அதற்கு உதாரணமாக அங்கு உள்ள காபி ஷாப்பில், பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, தயார் செய்யப்பட்ட ஒரு கப் காப்பி 2,500 திர்ஹாமிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது, இந்திய மதிப்பில் ரூ.60 ஆயிரம். இந்த காப்பிக்கு துபாயில் வசிக்கும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
உலகில் மிகக் குறைந்த அளவே விளையும் இந்த வகை காப்பி, அதீத சுவை கொண்டிருப்பதால் விலையும் பன்மடங்கு அதிகம். மிஷின் இல்லாமல், கைகளால் தயாராகும் இந்த பில்டர் காப்பி, இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த காப்பி, துபாயின் ரோஸ்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி காப்பி ஹவுசில் மட்டுமே கிடைக்கிறது.
''நாங்கள் பனாமா நாட்டில் அதிக தொடர்பில் இருப்பதால் மட்டுமே எங்களுக்கு இந்த காப்பி கிடைக்கிறது. இந்த காப்பி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. சுவை குறித்து காப்பி பிரியர்களிடம் பல கருத்துக்களை பெற்றோம். குடித்துப் பார்த்த அனைவருமே, இந்த காப்பியின் சுவை நன்றாக இருக்கிறது என்கின்றனர்,'' என துபாயின் ரோஸ்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி காப்பி ஹவுசின் நிறுவனர் கான்ஸ்டான்டின் தெரிவித்தார்.