உளவியல் படிப்புக்கு சேர்க்கை சென்னை பல்கலையில் ரத்து: வேறு படிப்பை தேர்வு செய்ய அறிவுறுத்தல்
உளவியல் படிப்புக்கு சேர்க்கை சென்னை பல்கலையில் ரத்து: வேறு படிப்பை தேர்வு செய்ய அறிவுறுத்தல்
UPDATED : அக் 03, 2025 04:55 AM
ADDED : அக் 03, 2025 04:45 AM

நடப்பு கல்வியாண்டு இளநிலை, முதுநிலை உளவியல் பாடப் பிரிவில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், வேறு படிப்புகளை தேர்வு செய்யலாம்; இல்லையேல் கல்வி கட்டணத்தை திரும்ப பெறலாம்' என்று சென்னை பல்கலை தெரிவித்து உள்ளது.
உளவியல், நுண்ணு யிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், உயிரி தொழில்நுட்பம், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை ஆகிய 'ஹெல்த் கேர்' படிப்புகளை, திறந்தநிலை, தொலைதுாரம் மற்றும் 'ஆன்லைன்' கல்வி முறையில் கற்பிக்க, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சமீபத்தில் தடை விதித்தது.
நடப்பு கல்வியாண்டு முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
500 பேர் அதன்படி, சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனம், இளநிலை மற்றும் முதுநிலை உளவியல் படிப்புகள் நடப்பு கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
உளவியல் பாடங்களை, தொலைதுார கல்வி வழியில் கற்பிக்கக் கூடாது என யு.ஜி.சி., உத்தரவிடுவதற்கு முன்னதாகவே, சென்னை பல்கலையில் இளநிலை படிப்பில் 500 மாணவ - மாணவியர் சேர்ந்து உள்ளனர்.
அதேபோல, முதுநிலை படிப்பிலும் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தொலைதுார படிப்பில் இளநிலை, முதுநிலை உளவியல் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு சேர்க்கை ஆணை பெற்ற மாணவ - மாணவியர், வேறு படிப்புகளை தேர்வு செய்ய சென்னை பல்கலை அறிவுறுத்தி உள்ளது; இல்லையெனில், கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பான ஒப்புதலை, சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி இயக்குநருக்கு, கடிதம் வாயிலாக வரும் 8ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
ஏற்கப்படாது மாற்று படிப்பில் சேரும்பட்சத்தில், கட்டண வேறுபாடு இருந்தால், அந்த கட்டணத்தை அக்., 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையேல், மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படாது என்று சென்னை பல்கலை தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே, தொலைதுார கல்வி நிறுவனத்தில் உளவியல் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ - மாணவியர் தங்கள் படிப்பை நிறைவு செய்யும் வரை தொடருவர் என சென்னை பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -