பாக்., அமைதியை விரும்பாவிட்டால் வேறு வழியில் பதிலடி தருவோம்: ஆப்கன் அமைச்சர் முத்தகி எச்சரிக்கை
பாக்., அமைதியை விரும்பாவிட்டால் வேறு வழியில் பதிலடி தருவோம்: ஆப்கன் அமைச்சர் முத்தகி எச்சரிக்கை
ADDED : அக் 13, 2025 02:58 AM

''பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே விரும்புகிறோம். அதற்கு அந்நாடு ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு வழியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்,'' என, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி எச்சரித்துள்ளார்.
ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி டில்லியில் நேற்று கூறியதாவது:
எந்த பிரச்னை என்றாலும் பரஸ்பர புரிதல் மற்றும் பேச்சு மூலமே தீர்வு காண முடியும் என்பது எங்களது கொள்கை. எல்லையில் பதற்றத்திற்கு இடம் தரக்கூடாது.
அதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், வேறு வழியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
பாகிஸ்தான் மக்களுடனோ அல்லது அங்குள்ள அரசியல்வாதிகளுடனோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சில தீய சக்திகள் தான் சூழ்நிலைகளை மோசமாக்க முயற்சிக்கின்றன.
விரும்பவில்லை நிலம் மற்றும் வான் எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமை மீது யாராவது குறுக்கிட்டால், உடனடியாக பதிலடி தருவோம்.
தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண சிலர் விரும்பவில்லை. எல்லைகளை பாதுகாக்கும் திறன் எங்களுக்கு இருக்கிறது. தற்போது எங்கள் தரப்பில் சண்டையை நிறுத்தி விட்டோம்.
நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம். பேச்சுக்கான கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறோம். ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியை கொண்டு வர விரும்புகிறோம்.
கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் நாட்டில் சண்டை நடந்து இருக்கிறது.
சோவியத் யூனியன் வந்தபோது, அதை முறியடித்தோம். அதன் பின் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன், 50 நாடுகளின் படைகள் வந்தன. 20 ஆண்டுகளாக அவர்களுடன் சண்டை நடந்தது. தற்போது தான் எல்லாம் முடிந்து ஆப்கானிஸ்தான் சுதந்திரமாக தனது சொந்த காலில் நிற்கிறது.
நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. பிரச்னைகளுக்கு பேச்சு வாயிலாகவே தீர்வு காண விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்ரா பயணம் ரத்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தகி நேற்று ஆக்ரா செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்தானது.