15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்: ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்
15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்: ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்
ADDED : அக் 06, 2025 10:24 PM

அபுதாபி : ஆப்ரிக்க மன்னர் ஒருவர், 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து, அரைகுறை ஆடையுடன் ஒருவர், பல பெண்களுடன் தனி விமானத்தில் வந்திறங்கினார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் மரியாதையாக வணங்கி, வீர வணக்கம் செலுத்தும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரது வருகையால் அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நபர் வேறு யாருமல்ல, தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி தான் அவர். ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கும் இவர், 1986 முதல் எஸ்வாட்டினியை ஆண்டு வருகிறார்.
தற்போது 57 வயதாகும் மன்னர் மஸ்வாட்டி, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் தோன்ற, அவரது 15 மனைவியர், 30 குழந்தைகள் வண்ணமயமான ஆப்ரிக்க உடைகளில் அழகாக காணப்பட்டனர். பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது தந்தை, முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர் மற்றும் 210 குழந்தைகள், 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய மன்னர் மூன்றாம் மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ளனர். ஆனால் இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்தனர். இவருக்கு, 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 'ரீட் டான்ஸ்' எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.