ADDED : ஆக 06, 2026 08:50 PM

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் செல்லும் திறன் கொண்ட அக்னி-4 பாலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இந்த சோதனையை பிராந்திய ராணுவ தலைமையகம் செய்தது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி -4 ஏவுகணை இன்று[ ஆகஸ்ட் 06 ] ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் சோதனை செய்யப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனையில், அனைத்து செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகளை எட்டியது எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையானது திட எரிபொருள் ராக்கெட் மோட்டார் வாயிலாக இரண்டு நிலைகளில், தரையில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
