14,000 ஏக்கர் குறுவை பாதிப்பு; உறுதி செய்தது வேளாண் துறை
14,000 ஏக்கர் குறுவை பாதிப்பு; உறுதி செய்தது வேளாண் துறை
ADDED : நவ 11, 2025 05:07 AM

சென்னை: டெல்டா மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த 14,000 ஏக்கர் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை, வேளாண் துறை உறுதி செய்து உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்தது.
இதனால், அதிகளவில் நெல் உற்பத்தியானது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல், உணவு துறை தாமதம் செய்தது.
இதனால், நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வெளியே, நெல் மூட்டை கள் குவித்து வைக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், அதில் நனைந்து, நெல் மணிகள் முளைத்தன.
மேலும், தாமதமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் மழையில் சிக்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல்மணிகள் வீணாகின. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால், விவசாயிகள் விரக்தி அடைந்தனர். குறுவையை தொடர்ந்து நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களும் பாதிக்கப்பட்டன.
வேளாண் துறை உத்தரவுப்படி, டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பின்படி, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, 14,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழுமையாக பாதித்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

