டில்லி விமான நிலையத்தில் பயணியை தாக்கிய விமானி; சஸ்பெண்ட் செய்தது ஏர் இந்தியா
டில்லி விமான நிலையத்தில் பயணியை தாக்கிய விமானி; சஸ்பெண்ட் செய்தது ஏர் இந்தியா
ADDED : டிச 20, 2025 09:34 PM

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் பயணியை தாக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அங்கித் திவான் என்பவர் மனைவி, 7 வயது மகள் மற்றும் 4 மாத குழந்தையுடன் பாதுகாப்புச் சோதனைகளில் இருந்துள்ளார். 4 மாத குழந்தையை அவர் ட்ராலி ஒன்றில் வைத்தபடி நின்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள், அங்கித் திவானையும், அவரின் குடும்த்தினரையும் உரிய பாதுகாப்பு பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
வரிசையில் சிலர் நிற்பதாக அங்கித் திவான் கூறவே, அப்போது நின்று கொண்டிருந்த பணியில் இல்லாத விமானி வீரேந்திர சேஜ்வால் ஆட்சேபித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் அந்த விமானி, பயணி அங்கித் திவானை தாக்கி இருக்கிறார். ரத்தம் வழிய தம் குடும்பத்தின் கண் முன்னே நிகழ்ந்த இந்த சம்பவத்தை அங்கித் திவான் தமது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்தார்.
இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட, பயணியை தாக்கியதாக வீரேந்திர சேஜ்வாலை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செயலை கண்டிப்பதாக கூறிய விமான நிறுவனம், துறை ரீதியான விசாரணை முடியும் வரை விமானியின் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்று கூறி இருக்கிறது.

