பறவை மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
பறவை மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
ADDED : செப் 04, 2025 01:31 PM

அமராவதி: விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பறவை மோதிய சம்பவத்தை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது, அதன் மீது கழுகு மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அறிவித்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பறவைகள் மோதுவதால் விமானங்களின் செயல்பாடுகளும் தொடர்ந்து பாதிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு, பறவை மோதியதால் 272 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.