வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2026 08:09 AM

புதுடில்லி: ''நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947 ஆக.,14 ல் பாகிஸ்தான் பிரிந்தது. இரு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள், காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பிரிவினையின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவு கூறும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிரிவினை கொடுமையின் நினைவு தினம். இதனை கொடுமைகளை நினைவுகூர்கிறேன். வரலாற்றில் பலரின் வாழ்க்கையைச் சிதைத்த ஒரு தருணம். ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.
அன்புக்குரியவர்கள் பறிபோனார்கள், அளவற்ற துன்பங்கள் அனுபவிக்கப்பட்டன. அதே சமயம், இதையெல்லாம் கடந்து, மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பி, இடர்களைச் சாதனைகளாக மாற்றி, நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தனர்.
அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் நமக்கு வலிமையை நினைவூட்டுகின்றன. இந்த நாள், நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உணர்த்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
