ADDED : ஆக 21, 2026 02:29 PM

புதுடில்லி: எல்லை பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: பிஎஸ்எப் மூலம் எல்லை வேலி அமைப்பதற்கான நிலத்தைக் கேட்டு, மம்தா பானர்ஜியிடம் நான் விடுத்த தீவிர கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் போயின; எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியா-வங்காளதேச எல்லைக்கு வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை முந்தைய முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கவில்லை. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 2014ம் ஆண்டு முதல் நான் கேட்டு வந்த 1,129 ஏக்கர் நிலம் தற்போது முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ அரசு அமைந்த பின்னரே கிடைத்தது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசியப் பாடலான 'வந்தே மாதரத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்காத முந்தைய அரசுகளின் செயல் குறித்து நான் வருத்தம் அடைந்தேன். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் பாடப்படும் வரை, 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவம் இந்தியாவில் ஒருபோதும் பாடப்படவில்லை.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இப்பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆன நிலையில், தேசம் இறுதியாக இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
