நீதித்துறை செயல்முறையை எளிமையாக்கிய புதிய சட்டங்கள்: அமித் ஷா பெருமிதம்
நீதித்துறை செயல்முறையை எளிமையாக்கிய புதிய சட்டங்கள்: அமித் ஷா பெருமிதம்
ADDED : அக் 05, 2025 12:10 AM

குருக்ஷேத்ரா:“நம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய சட்டங்கள், நீதித்துறை செயல்முறையை எளிமையாக்குவதுடன், வழக்குகளை விரைந்து முடிக்க உதவும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள், நம் நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1ல் அமல்படுத்தப்பட்டன.
'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அபினியம்' ஆகிய இந்த மூன்று புதிய சட்டங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். இதன்பின், அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வரும் 2026க்கு பின், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவான எந்தவொரு வழக்குகளிலும், மூன்று ஆண்டுகளுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சட்டங்கள், இதை உறுதிப்படுத்தும். கடந்த ஓராண்டில், நாடு முழுதும் புதிய சட்டங்களின் கீழ், 53 சதவீத குற்ற வழக்குகள் பதிவானதுடன், 60 நாட்களுக்குள் அவற்றுக்கான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களின் கீழ், வழக்குகளில் அடிக்கடி வாய்தா வழங்கப்படுவது தடுக்கப்படுவதுடன், நீதி விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.