அனில்அம்பானி நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு சொத்து பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
அனில்அம்பானி நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு சொத்து பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
UPDATED : அக் 14, 2026 09:54 PM
ADDED : அக் 14, 2026 09:21 PM

-நமது டில்லி நிருபர்-
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவரின் ரிலையன்ஸ்பவர் உள்ளிட்ட ரிலையன்ஸ் குழுமத்தில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.40 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அந்நிய நிதி மேலாண்மை சட்டம்( FEMA) சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் பவர் லிமிடெட்(RPL) நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் 2,032,81 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. Rpl நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள், அதன் சசன் பவர் நிறுவனத்தின் பங்குகள், வெளிநாட்டில் உள்ள சொத்துகள் ஆகியவை அடங்கும்.
விசாரணையில், RPL நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு கழகம் 275 மில்லியன் டாலர் நிதி திரட்டி, சிங்கப்பூரில் துணை நிறுவனத்தில் முதலீடு செய்தது தெரிந்தது. அந்த நிறுவனம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள வங்கி ஒன்றில் டெபாசிட் செய்தது. அந்த நிதி அனில் அம்பானியின் குழுமத்தின் நலனுக்காக வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
