UPDATED : ஜூலை 05, 2026 05:53 PM
ADDED : ஜூலை 05, 2026 05:14 PM

சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில், ஏற்கனவே கைதான திருநாவுக்கரசு என்பவரின் கார் டிரைவர் கிருஷ்ணா என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45. இவர், ஐபிடிஎஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், 45, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 40 ஆகியோரும், தவெக - எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., - எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின்படி, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி திமுக - எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர், ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐடிபிஎஸ் திருநாவுக்கரசுவின் கார் டிரைவரான கிருஷ்ணாவை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
