நீதிபதி சுவாமிநாதனை மிரட்டும் தேச விரோத சக்திகள்; நடிகை கஸ்தூரி ஆவேசம்
நீதிபதி சுவாமிநாதனை மிரட்டும் தேச விரோத சக்திகள்; நடிகை கஸ்தூரி ஆவேசம்
UPDATED : டிச 10, 2025 08:22 PM
ADDED : டிச 10, 2025 08:16 PM

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனை, தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டுவதாகவும், பொதுவெளியில் அவதூறு பரப்புவதாகவும், நடிகையும், பாஜ நிர்வாகியுமான கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக, திருப்பத்தூரில் நிருபர்களிடம் கஸ்தூரி கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அங்குள்ள ஹிந்து, முஸ்லிம் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக கண்டு கொள்ளாத நிலையில் அரசியலுக்காக திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்த்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பையும் திமுக அரசு செய்துவிட்டு, தொடர்ச்சியாக மூன்று முறை நீதிமன்ற தீர்ப்பை மீறிய தமிழக ஹிந்து விரோத திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்னும் தெளிவான ஒரு தீர்ப்பினை கொடுத்து இருக்கிறார். வழங்கிய தீர்ப்பின் விவகாரம் முதல் முறை அல்ல பலமுறை இது போன்று நடந்துள்ளது. தமிழக அரசு ஹிந்து பண்டிகைகள் மற்றும் ஹிந்து கோவில்களுக்கு ஏதோ ஒரு வகையில் செயல்பாடுகளை எடுக்காமல் எதிர்வினை ஆற்றுகிறது.
தனிப்பட்ட முறையில்...!
தீர்ப்பை கொடுக்கும் நீதிபதியை, என்ன விதமாக எல்லாம் நீங்கள் அவதூறு பேசுகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனை, இந்த அரசு தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. ஒரு நீதிபதியை திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி அரசுகள் தொடர்ந்து அவர் மீது அவதூறு பரப்பி வருவதன் மர்மம் என்ன?
இசட் பாதுகாப்பு
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேச விரதோ சக்திகள் சோசியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில் அவரை பொதுவெளியில் அவதூறு பரப்பி வருவதால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு இசட் பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக மக்களின் மன ஓட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிந்திருந்தாலும் மீசையில் மண் ஓட்டாதது போல் தான் அவர் தற்போது பேசி வருகிறார்.
தமிழக மக்கள் மட்டுமல்லாமல் திமுக ஓட்டு வங்கியே அவருக்கு எதிராக திமுக அரசின் மீது மனம் நொந்து அதிருப்தியில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக அரசு எதிர்க்கட்சி ஆக வேண்டுமானாலும் பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.

