நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; ரூ 84 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 34 பேர் சத்தீஸ்கரில் சரண்
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; ரூ 84 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 34 பேர் சத்தீஸ்கரில் சரண்
ADDED : டிச 16, 2025 07:23 PM

ராய்ப்பூர்: மத்திய அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக, சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 34 பேர் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இதை ஒடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 16) சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 34 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். அவர்களில் 26 பேர் குறித்து, தகவல் அளிப்பவருக்கு ரூ.84 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
'இவர்களுக்கு சத்தீஸ்கர் அரசால் வழங்கப்படும் பிற வசதிகளுடன், தலா ரூ.50,000 உடனடியாக வழங்கப்படும்' என பிஜாப்பூர் மாவட்ட எஸ்பி ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 2,200க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

