ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதல்வருக்கு பாராட்டு விழா
ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதல்வருக்கு பாராட்டு விழா
UPDATED : ஜன 05, 2026 06:47 AM
ADDED : ஜன 05, 2026 01:41 AM

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில், 2003ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சங்க நிர்வாகிகளிடையேயும், இதுதொடர்பாக முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. ஆனால், தேர்தல் நேரம் என்பதால், கருத்து வேறுபாட்டை களைந்து, முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க அழைப்பு விடப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

