அசாம் தேயிலை முதல் காஷ்மீர் குங்குமம் வரை: புடினுக்கு பிரதமர் மோடியின் சிறப்பு பரிசு
அசாம் தேயிலை முதல் காஷ்மீர் குங்குமம் வரை: புடினுக்கு பிரதமர் மோடியின் சிறப்பு பரிசு
ADDED : டிச 05, 2025 11:08 PM

புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு பாரம்பரியமிக்க பரிசு பொருட்களை பிரதமர் மோடி வழங்கினார். இது இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனை எடுத்துக்காட்டுவதுடன், இரு நாட்டு உறவுகளின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அசாம் தேயிலை, முர்ஷிதாபாத் சில்வர் தேநீர் கோப்பை, கைவினைஞர்கள் உருவாக்கிய சில்வர் குதிரை, ஆக்ராவைச் சேர்ந்த மார்பிள் செஸ் செட், காஷ்மீர் குங்குமம் மற்றும் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை ஆகியவை அடக்கம்.
அசாம் தேயிலை
வளமான பிரம்மபுத்திரா நதியில் வளர்க்கப்படும் சிறந்த அசாம் கருப்பு தேயிலையானது, அதன் சுவைக்காக கொண்டாடப்படுகிறது. 2007 ம் ஆண்டில் இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது. பாரம்பரியம் மற்றும் உடல்நலத்திற்கு உகந்ததாக விளங்கும் இந்த தேயிலை, ஒவ்வொரு கோப்பையிலும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
முர்ஷிதாபாத் தேநீர் கோப்பை செட்
அசாம் தேயிலைக்கு துணையாக நுணுக்கமான முறையில் அலங்கரிக்கப்பட்ட முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பை செட் ஒன்றை மோடி பரிசாக அளித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான கலாசார தொடர்புகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குதிரை சிலை
மஹாராஷ்டிராவின் கைவினைப் பொருட்களால் ஆன வெள்ளிக் குதிரை, இந்தியாவின் உலோகக் கைவினைத்திறனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இரு நாடுகளிலும் பாராட்டப்படும் கண்ணியம் மற்றும் வீரத்தை உள்ளடக்கும் வகையில் இந்த சிலை பரிசாக வழங்கப்பட்டது.
செஸ்செட்
நேர்த்தியான கல் பதிப்பு மற்றும் ரத்தினங்களால் அலங்காரங்களை இணைத்து செய்யப்பட்ட ஆக்ரா பளிங்கு செஸ் செட்டானது, இந்திய கலைத்திறனை எடுத்துக்காட்டுவதுடன், அதன் நேர்த்தியான செயல்பாட்டை குறிக்கிறது.
காஷ்மீர் குங்குமம்
சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் குங்குமம், சமையல் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. பிராந்திய பாரம்பரியம் மற்றும் கைகளினால் அறுவடை செய்யப்படுவதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பகவத் கீதை
பிரதமர் அளித்த பரிசுப் பொருட்களின் முக்கியமானதாக ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை உள்ளது. இது இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான பிரதமரின் நீண்ட கால முயற்சிகளில் ஒன்றாகும்.

