ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு; 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு; 7 பேர் பலி
UPDATED : நவ 03, 2025 11:08 AM
ADDED : நவ 03, 2025 08:10 AM

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள், கட்டடங்கள் குலுங்கியதை கண்டு, சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மேலும்,150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். பல்ஹா மாகாணத்தின் கவர்னர் செய்தி தொடர்பாளர் ஹாஜி ஜைதின் கூறியதாவது: இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், என்றார்.
வடக்கு ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட மூன்று நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் முன்னாள் பள்ளி டிச்சர் ரஹிமா கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, தனது குழந்தைகள் படிக்கட்டுகளில் இருந்து கத்திக் கீழே ஓடினர்.
என் வாழ்நாளில் இவ்வளவு வலுவான நிலநடுக்கத்தை நான் அனுபவித்ததில்லை. ஜன்னல்கள் சேதம் அடைந்தது. எனது வீடு கான்கிரீட்டால் ஆனது. இதனால் லேசாக சேதம் அடைந்துள்ளது. நகரின் புறநகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மண்ணால் ஆன வீடுகள் அனைத்தும் தரைமட்டம் ஆனது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

