தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி: அமித்ஷா
தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி: அமித்ஷா
ADDED : டிச 10, 2025 06:47 PM

புதுடில்லி: ''திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள்,'' என லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதை திமுக அரசு எதிர்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
தற்போது நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வர வலியுறுத்தும் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு அதில் 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதை கனிமொழி தலைமையில் பிரியங்கா உள்ளிட்ட சில எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கினர்.
இந்நிலையில் லோக்சபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா இது குறித்து பேசும்போது, 'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள்' என குற்றம் சாட்டினார்.இதற்கு தமிழக எம்பிக்கள் கோஷம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

