மதமாற்ற முயற்சி; ஹிந்து மாணவனுக்கு இஸ்லாமிய நடைமுறை வீட்டுப்பாடமாக வழங்கிய ஆசிரியை நீக்கம்
மதமாற்ற முயற்சி; ஹிந்து மாணவனுக்கு இஸ்லாமிய நடைமுறை வீட்டுப்பாடமாக வழங்கிய ஆசிரியை நீக்கம்
UPDATED : ஜூலை 16, 2026 09:45 PM
ADDED : ஜூலை 16, 2026 07:23 PM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஹிந்து மாணவருக்கு, இஸ்லாமிய நடைமுறைகளை வீட்டு பாடமாக வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதை அடுத்த சயீதாபாதில், 'சக்சஸ்' என்ற தனியார் குழுமத்தின் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் தரப்பட்டது. அதில், இஸ்லாமிய மத நடைமுறையான தொழுகை செய்ய வலியுறுத்தப்பட்டது. இதைப் பார்த்த மாணவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மறுநாள் பள்ளிக்கு சென்று முறையிட்டதில், மாணவனின் வகுப்பாசிரியை ஷேக் ஆயிஷா பர்வீன், இந்த வீட்டுப் பாடத்தை வழங்கியது தெரியவந்தது. அவர் தவறுதலாக வீட்டுப் பாடத்தை வழங்கியதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதை ஏற்காத பெற்றோர், ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இது குறித்து போலீசிலும் புகாரளிக்கப்பட்டது.
பள்ளியில் பெற்றோர் முறையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஹிந்து மாணவனுக்கு இஸ்லாமிய நடைமுறை வீட்டுப் பாடமாக வழங்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சில மாணவர்களின் பெற்றோர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, தனியார் பள்ளி ஆசிரியை ஆயிஷா பர்வீன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,
'ஹிந்து மாணவனுக்கு, இஸ்லாமிய நடைமுறை வீட்டுப் பாடமாக வழங்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற அமைப்புகள் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? வரும் 2028 சட்டசபை தேர்தலுக்கு பின், தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி. அப்போது, அனைத்து ஹிந்து மாணவர்களும் நெற்றியில் திலகம் அணிவது கட்டாயமாக்கப்படும்,” என்றார்.
