UPDATED : மார் 01, 2026 01:06 AM
ADDED : மார் 01, 2026 01:05 AM

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா கமேனி மற்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அணுசக்தி திட்ட ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சு நடந்து கொண்டிக்கும் போதே, ஈரான் மீது நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலின் முக்கிய இலக்காக, கமேனி மற்றும் மசூத் ஆகியோர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ப முதல் தாக்குதல், உச்ச தலைவர் கமேனி அலுவலகம் மற்றும் குடியிருப்பு அருகே நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், கமேனி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்திருப்பதும், அதில் இருந்து கரும்புகை வெளியாவதும் பதிவாகியுள்ளது.
இத்தாக்குதல்களில் உச்ச தலைவர் கமேனியும், அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு ஈரானிய
அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு முன்னதாகவே கமேனியும், மசூத்தும் ரகசிய மற்றும் அதீத பாதுகாப்பு கொண்ட இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராணுவ அமைச்சர், தளபதி பலி
ஈரானின் ராணுவ மற்றும் ஆயுதப்படை தளவாட துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே, இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை தளங்களின் பாதுகாப்பு பொறுப்பாளர்.

மேலும், ஈரான் ராணுவ தளபதியாக இருந்த முகமது பாக்பூர் கொல்லப்பட்டுள்ளதாகவும்
செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ஈரான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிராந்திய ராணுவ நடவடிக்கைகளில், மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர்களுடன், ஈரானின் ராணுவ உளவுத்துறை தலைவர் சலே அசாதியும் கொல்லப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஒட்டுமொத்த ராணுவ கட்டமைப்பையும் குலைப்பதே, இத்தாக்குதலின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

