51 வயதில் செய்த குற்றத்துக்கு 84 வயதில் கிடைத்தது தண்டனை
51 வயதில் செய்த குற்றத்துக்கு 84 வயதில் கிடைத்தது தண்டனை
UPDATED : ஜூன் 02, 2026 07:44 PM
ADDED : ஜூன் 02, 2026 07:19 PM

நமது நிருபர்
பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஜூதாவன்பூர் பகுதியைச் சேர்ந்த அடாலத் ராய், கடந்த 1992ம் ஆண்டு மே 10ம் தேதி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், எங்கள் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், 1993ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரில், நான்கு பேர் உயிரிழந்து விட்டனர்.
இதில், தீப் ராய் மட்டுமே விசாரணையின் போது நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி வந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கில் நேற்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மனோஜ் குமார் திவாரி, தீப் ராய் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போது, தீப் ராயின் வயது 51. தற்போது, 84. வயோதிகம் காரணமாக, மற்றவர் துணையின்றி அவரால் நடக்கக்கூட முடியவில்லை. சாதாரண வன்முறை வழக்கில் தீர்ப்பு வழங்க, 33 ஆண்டுகள் ஆனது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
