பெண் பயணிக்கு பாதுகாப்பு: 'பைக் டாக்சி' டிரைவருக்கு பாராட்டு
பெண் பயணிக்கு பாதுகாப்பு: 'பைக் டாக்சி' டிரைவருக்கு பாராட்டு
ADDED : செப் 29, 2025 04:37 AM

ஹைதராபாத்: வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆட்டோ, கார்களை போல வாடகைக்கு பைக்கை இயக்கும் நிறுவனங்களில் ஒன்று 'ராபிடோ' இதில் பைக் ஓட்டும் நபர் ஒருவர் சமீபத்தில் பெண் பயணியை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார்.
வீட்டு வாசலில் இறங்கிய அந்த பெண், வீட்டு சாவியை எங்கோ தவறவிட்டதை அறிந்தார். தோழியுடன் அந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதனால் தோழியை தொடர்பு கொண்டு மாற்று சாவியை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
தோழி வரும் வரை அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராபிடோ டிரைவர் வாசலிலேயே காத்திருந்துள்ளார். அவரது தோழி சாவியுடன் வந்த பின் விடைபெற்று சென்றார். இதை அந்த பெண் வீடியோ எடுத்து இன்னமும் மனிதாபிமானம் உள்ளது என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ராபிடோ டிரைவரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. கர்பா இரவு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, இந்த அனுபவத்தை பெற்றதாக அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.