பார்லி கூட்டத்தொடரை புறக்கணித்து ஜெர்மனி செல்லும் ராகுல்; பாஜ கடும் விமர்சனம்
பார்லி கூட்டத்தொடரை புறக்கணித்து ஜெர்மனி செல்லும் ராகுல்; பாஜ கடும் விமர்சனம்
UPDATED : டிச 10, 2025 01:48 PM
ADDED : டிச 10, 2025 01:46 PM

புதுடில்லி: பார்லி கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. சுற்றுலாவுக்கான தலைவர் என்பதை ராகுல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டதாக விமர்சனம் செய்துள்ளனர்.
பரபரப்பாக நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது. இதில், வந்தே மாதரம் மற்றும் எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. எஞ்சியுள்ள நாட்கள் இன்னும் சுவாரஸ்யமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், லோக் சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், பார்லிமென்ட் கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் 15ம் தேதி ஜெர்மனி செல்லும் அவர், பெர்லினில் 17ம் தேதி நடக்கும் புலம்பெயர் இந்தியர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, வந்தே மாதரம் தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையின் போது பார்லிமென்டை புறக்கணித்த ராகுலின் இந்த ஜெர்மனி பயணத்தை பாஜவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராகுலின் இந்தப் பயணம் குறித்து பேசிய பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா, இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அவர் கூறுகையில், ' ராகுல் மீண்டும் ஒருமுறை தன்னை சுற்றுலாவுக்கான தலைவர் (Leader of Paryatan) என்பதை நிருபித்து விட்டார். மக்கள் உழைக்கும் நோக்கத்தில் இருக்கும் வேளையில், ராகுல் எப்போதும் சுற்றுலா செல்லும் எண்ணத்திலேயே இருந்து வருகிறார். பீஹார் சட்டசபை தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வேளையில், ராகுல் மட்டும் வனத்தில் சபாரி சென்றிருந்தார்,' என்றார்.

