737 மேக்ஸ் ரக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு; போயிங் நிறுவனம் எச்சரிக்கை
737 மேக்ஸ் ரக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு; போயிங் நிறுவனம் எச்சரிக்கை
ADDED : செப் 28, 2026 07:36 AM

புதுடில்லி: போயிங் நிறுவனம் அதன் 737 மேக்ஸ் ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மென்பொருள் கோளாறு குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
விமான தயாரிப்பில், உலகின் முன்னணி நிறுவனமான போயிங் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த 2400க்கும் மேற்பட்ட பி 737 விமானங்கள் உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா விமான நிறுவனங்களிடம் இந்தியாவில் 100 விமானங்கள் உள்ளன.
இந்நிலையில், சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இது குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கும்போது ஏதேனும் காரணங்களால் முதல் முயற்சியை கைவிட்டு , இரண்டாவது முறையாக தரையிறங்க முயலும்போது இந்த கோளாறு ஏற்படுகிறது
அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், விமானத்தின் தானியங்கி வழிசெலுத்தல் அம்சம் தற்காலிகமாக செயலிழக்கக்கூடும். இதனால் விமானிகள் தானியங்கி உதவியின்றி, மேனுவலாக விமானத்தை இயக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது விமானிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும்; நிரந்தர மென்பொருள் புதுப்பிப்பு வெளியாகும் வரை, இரண்டாவது முறை தரையிறங்கியவுடன் விமானத்தின் சிஸ்டமை ரீசெட் செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண போயிங் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அகாசா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: நாங்கள் போயிங் நிறுவனத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்; பாதுகாப்பிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். எங்கள் விமான சேவைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்குகின்றன, என்றார்.
