ஆர்.எஸ்.எஸ்., ஆபீசில் குண்டு வீச்சு; பாக்., பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பா?
ஆர்.எஸ்.எஸ்., ஆபீசில் குண்டு வீச்சு; பாக்., பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பா?
UPDATED : ஜூன் 19, 2026 01:00 AM
ADDED : ஜூன் 19, 2026 12:59 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நிவரான்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது, நேற்று முன்தினம் காலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசினர். இது குறித்து சிறப்பு குழு அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ராஞ்சி நகர எஸ்.பி., பராஸ் ரானா கூறியதாவது: குண்டு வீச்சில் தொடர்புடைய மூவர் கைது செய்யப் பட்டு, கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு குற்றவாளி கழிப்பறை செல்வதாக கூறி ஜன்னலை உடைத்து தப்பினார். 'சிசிடிவி' பதிவை ஆய்வு செய்தபோது பஸ்சில் சயீப் தப்பி செல்வது தெரிந்தது.
இதை கண்காணித்த போலீசார், சன்ஹோ சுங்கச் சாவடி அருகே அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது போலீசாரின் துப்பாக்கியை பறித்த சயீப் மூன்று முறை போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார்.
பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் சயீப் காலில் காயம் ஏற்பட்டது. கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
