தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : செப் 07, 2025 08:46 PM

திண்டுக்கல்: '' இன்று தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை ,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுபயணத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் இபிஎஸ் பேசியதாவது: சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை சிலபேர் கடுமையாக தாக்கினார்கள். அதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் மீது வெடிகுண்டு வீசினார்கள். அவர் கழிவறைக்குச் சென்று உயிர் தப்பியிருக்கிறார். இன்று தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை. பட்டப்பகலில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசுகிறார்கள் என்று சொன்னால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?
திமுகவைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பேருந்து பயணத்தில் ஒருவரிடமிருந்து 4 பவுன் நகை திருடியிருக்கிறார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் இருப்பவரை தேர்வு செய்யும் நிலை திமுகவில் இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஊராட்சி மன்றத் தலைவரே திருடுகிறர் என்றால் கீழே இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?
இங்கிருக்கும் அமைச்சர் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர். ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் நிதியை எடுத்து வேறு வேலைக்குப் பயன்படுத்துகிறார். இது மக்களை வஞ்சிக்கும் செயல். எந்த அரசும் உள்ளாட்சி நிதியை வேறு பணிக்கு செயல்படுத்தியது கிடையாது, ஆனால் திமுக அரசு செய்கிறது.
திமுக கம்பெனி. கருணாநிதி ஓனராக இருந்தார். இப்போது ஸ்டாலின் அதிபராகிவிட்டார், உதயநிதி வருவதற்கு துடிக்கிறார். உதயநிதி என்ன சேவை செய்தார்? போராட்டம் நடத்தி ஜெயிலுக்குப் போயிருக்கிறாரா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் தான் அதுதான் அவரது அடையாளம்.
இங்கிருக்கும் அமைச்சர் பெரியசாமி கட்சிக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார். முன்பு ஒரு நிகழ்ச்சியில் மனு வாங்கினார்கள். அப்போது உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரியசாமியை ஓரமாக உட்கார வைத்துவிட்டனர். திமுகவில் உழைப்பவர்களுக்கெல்லாம் ஓரமாகத்தான் இடம் கிடைக்கும். பெரியசாமி வயது என்ன, உதயநிதி வயது என்ன? உழைப்பவர்களுக்கு வேலை கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் எல்லா அதிகாரமும் கிடைக்கும்.
அதிமுகவில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்த ஒரு பெண் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் பெயின்ட் அடிப்பவர் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். ஏழைகளையும் எம்எல்ஏவாக தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக. திமுகவில் கருணாநிதி குடும்பம் போலவே மற்ற நிர்வாகிகளும் இருக்கிறார்கள். பெரியசாமி மகன் எம்எல்ஏ. நேரு மகன் எம்பி. துரைமுருகன் மகன் எம்பி. இதுதான் அங்கு வழக்கம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.