சீனாவுடான எல்லை பிரச்னை நமக்கு மிகப்பெரும் சவால்: முப்படை தளபதி அனில் சவுகான்
சீனாவுடான எல்லை பிரச்னை நமக்கு மிகப்பெரும் சவால்: முப்படை தளபதி அனில் சவுகான்
ADDED : செப் 05, 2025 07:27 PM

கோரக்பூர்; சீனாவுடான எல்லை பிரச்னை என்பது நமக்கு மிகப் பெரும் சவால் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறி உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சவால்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாத முகாம்களை அழிக்கவும், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே தாக்க வேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. திட்டமிடுதல், அழிக்க வேண்டிய இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது பலமுனை தாக்குதல்.
பாகிஸ்தானின் மறைமுக போர் என்பது நமது தேசிய பாதுகாப்புக்கு பெரிய சவால். இந்தியாவை ரத்தம் சிந்த வைப்பது தான் பாகிஸ்தானின் உத்தி.
நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்பது தற்காலிகமானவை அல்ல. அவை வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. சீனாவுடனான எல்லை பிரச்னை என்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 2வது பெரிய சவால் என்பது பாகிஸ்தானின் மறைமுக போர்.
நமது இரு எதிரிகளும் அணு ஆயுத வல்லமை படைத்தவை. அவர்களுக்கு எதிராக நாம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை தீர்மானிப்பது எப்போதுமே சவால் ஆகவே இருக்கும்.
இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.