டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
UPDATED : அக் 15, 2025 02:46 PM
ADDED : அக் 15, 2025 04:27 AM

சென்னை: தீபாவளி முன்னிட்டு டில்லியில் 4 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும். இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேவையற்ற கட்டுப்பாடுகள்
டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாட்கள் சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்குவதாக தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே, மொத்தம் 2 மணி நேரம் அனுமதி வழங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.
தற்போது பட்டாசு விற்கும் விலையில், குழந்தைகள் அதிகநேரம் பட்டாசு வெடிக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் நிலையில், இந்த நாளில் வெடிக்கக் கூடாது, இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.
இதனால், பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கட்டுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.