நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
ADDED : செப் 26, 2025 12:16 PM

புதுடில்லி: பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை இரண்டு மிக முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். முதலாவது, பிஎஸ்என்எலின் 4ஜி சேவையாகும். நாடு முழுவதும் உள்ள 98,000 தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவின் எந்த பகுதியும் விடுபடாது. எங்களின் 4ஜி டவர்கள் மற்றும் பிடிஎஸ்கள் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன. இது முழுமையாக மென்பொருள் மூலம் இயக்கப்பட்டு, தடையில்லாமல் 5Gக்கு மேம்படுத்தப்படும்.
இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்துகிறோம். இதில், 29,000 முதல் 30,000 வரையான கிராமங்கள் 4ஜி செறிவு திட்டப் பணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.
இன்று ஒரு வரலாற்று நாள். பிஎஸ்என்எல்லுக்கோ, தொழில்நுட்ப உபகரண உற்பத்தி துறைக்கோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று நாள். பிரதமர் மோடி நாளை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும்.
இது தொலைதொடர்புத் துறைக்கு ஒரு புதிய யுகம். உலகில் தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நான்கு பெரும் நாடுகள் மற்றும் ஐந்து பெரும் நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இந்தியா உலக வரலாற்றில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாகவும், ஆறாவது நிறுவனமாகவும் உள்ளது.
இந்தப் பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து, உந்துதல் அளித்து, வழிநடத்தினார். 2020ம் ஆண்டில், 4ஜி உபகரணங்களுக்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டபோது, வெளிநாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு பதிலாக, நமது சொந்த 4ஜி உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்று ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்தார். அதன்படி, வரலாற்று ரீதியாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை வாங்குபவராக இருந்த நம் நாடு, வெறும் 22 மாதங்களில், சொந்த உள்நாட்டு 4ஜி உபகரணங்களை உருவாக்கும் நாடாக மாறி சாதனை படைத்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.