பிரிட்டனை விட்டு வெளியேறுகிறார் தொழிலதிபர் லட்சுமி மிட்டல்: அதிக வரிவிதிப்பு திட்டத்தால் முடிவு
பிரிட்டனை விட்டு வெளியேறுகிறார் தொழிலதிபர் லட்சுமி மிட்டல்: அதிக வரிவிதிப்பு திட்டத்தால் முடிவு
ADDED : நவ 23, 2025 10:22 PM

லண்டன் : பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க, பிரிட்டன் முடிவு செய்துள்ளதால், அந்நாட்டை விட்டு வெளியேற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், உலக புகழ்பெற்ற உருக்கு தொழிலதிபருமான லட்சுமி மிட்டல் முடிவு செய்துள்ளார்.
நம் நாட்டின் ராஜஸ்தானில் பிறந்தவர் தொழிலதிபர் லட்சுமி மிட்டல், 75. இவர் வெளிநாடுகளில் உருக்கு ஆலைகளை துவங்கினார். கடந்த, 1980களின் இறுதியில் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று செட்டில் ஆனார். அங்கிருந்தபடி தன் உருக்கு ஆலை தொழிலை கவனித்து வந்தார். அவரது 'ஆர்சிலோர் மிட்டல்' உருக்கு ஆலை தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.20 லட்சம் கோடி ரூபாய்.
இதன் மூலம் பிரிட்டனின் எட்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார்.
இந்நிலையில், பிரிட்டன் அரசு கடந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கு பல்வேறு வரிகளை உயர்த்தியது. புதிய வரிகளை விதித்தது. குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் அதற்கு வாரிசு வரியை அறிமுகப்படுத்தியது. இதனால் பெரும் தொழிலதிபர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.மேலும் வரும் 26ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பிரிட்டனை விட்டு வெளியேறும் தொழிலதிபர்களுக்கு 20 சதவீத வெளியேறும் வரி விதிக்க நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இதனால் இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டல் மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு இடம்பெயர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வாரிசு வரி கிடையாது. லட்சுமி மிட்டலுக்கு துபாயில் ஏற்கனவே சொத்துக்கள் உள்ளன.

